”நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்பட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடு பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதனை அனைவரும் அறிவர்.
எனவே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு சிறந்த முறையில் வழி நடத்தக்கூடிய ஒருவரையே நாம் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இந்த வங்குரோத்து நிலை ஏற்படவில்லை
கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த 2015 ஆம் ஆண்டு தொடக்கமே இந்த வங்குரோத்து நிலை ஆரம்பமானது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு கோட்டாபய முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே
மக்கள் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனையடுத்து கோட்டாபய அவரது பதவியை இராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒருவராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் தெரிவு செய்தோம். எனினும் எதிர்வரும் காலங்களிலும் அவருடன் இணைந்து பயணிப்பதா இல்லையா என்பது தொடர்பாக எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பெசில் ராஜபக்ஷ மற்றும்
எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடனும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்“ இவ்வாறு காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.