நாட்டில் யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதும் வட மாகாணத்தில் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் மானிப்பாய் புனித. ஹென்றியரசர் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வட மாகாணத்திலுள்ள மக்களை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு அபிவிருந்திகள் இடம்பெறவில்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.
எனவே நாம் இங்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளோம். தமிழ் மக்களை முன்னிலைப்படுத்திய, பங்கேற்பு அபிவிருத்தியின் ஒரு வடிவமாக அதனை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
இதன் மூலம் வடக்கிலிலுள்ள கிராமங்களை கட்டியெழுப்ப முடியும். கிராமங்களை முன்னேற்றுவதனால் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு
மிகப்பெரிய பக்கபலம் கிடைக்கும்.
இதற்கு அறிவு சார்ந்த பொருளாதாரம், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடு இன்று எழுந்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் பூங்காக்களை அமைத்து, அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக முன்னெடுப்போம். இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.