பொருளாதாரத்தின் மீது சர்வதேசமும், நாட்டு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு காணப்பட்ட சமூக கட்டமைப்புக்கும் தற்போதைய நிலவரத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றதாகவும் பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்த தீர்மானங்களினால் நாட்டு மக்கள் குறுகிய கால நெருக்கடிகளை எதிர்க்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முன்வைத்த கடுமையான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்ட பின்னரே மூன்றாம் தவணை விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி கூறுவது அடிப்படையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு தவணைக்கும் புதிதாக நிபந்தனைகள் விதிப்பதில்லை எனவும் கடன் சமனிலை மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் அந்த செயற்திட்டங்களை ஒருபோதும் மாற்றியமைக்க போவதில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக போலியான வாக்குறுதிகளை தாங்கள் வழங்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.