இன்று பிற்பகல் 2 மணிக்குள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
ஒரே சேவைக்கட்டமைப்பில் உள்ளடங்கும் ஏனைய பிரிவுகளுக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்களுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்குவதில் புகையிரத நிலைய அதிபர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அநீதிக்கு தீர்வு காணும் வகையில் புகையிரத நிலைய அதிபர்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கும் வழிமுறைகளுடன் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடந்த ஜனவரி முதலாம் திகதி எழுத்து மூலமாக சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து சேவையில் ஈடுபட்ட போதிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், எமது கோரிக்கைகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் ஏதுவும் இல்லாமல் பொது பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.