இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய வழிபாட்டிற்குச் சென்று கொண்டிருந்தவர்கள் பயணித்த சுற்றுலா வான் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்றவேளை 24 பேர் குறித்த வானில் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும்அவா் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.