நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது.
அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது.
குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை.
இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.