சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள அவர், “நீட்“ தேர்வை சுற்றி இடம்பெற்று வரும் சர்ச்சைகள், அதன் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு நாம் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதற்கு மாறாக அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை “நீட்” என்ற தேர்வு பறிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தகுதியின் அளவாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாணவர் விரோத, சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.