ரணில் தேர்தலை வைப்பாரோ இல்லையோ, அவர் என்ன தந்திரங்களைச் செய்வாரோ இல்லையோ,வடக்கில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.குறிப்பாக,பொது வேட்பாளர் என்ற விடயத்தை மையப்படுத்தி தேர்தல் களம் சூடுபிடித்த தொடங்கிவிட்டது.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,பொது வேட்பாளரை எதிர்க்கிறவர்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்குத்தான் தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கப் போகிறார்கள். எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளர் தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமரசத்துக்கு தயாராக இருக்கிறாரோ அவருக்கு தமிழ் வாக்குகளை சாய்த்து கொடுப்பது என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படையாக கூறுகிறார்கள். எனவே அவர்கள் தமிழ் வாக்குகளை சாய்த்துக் கொடுக்கப்போகும் மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதில் முதலாவதாக ரணில். அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னிருந்து இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகச் சுருக்கிப் பேசி வருகிறார். மேலும் அதை ஒரு விதத்தில் பொருளாதாரப் பிரச்சினை என்ற தொனிப் படவும் பேசுகிறார்.மாகாண சபைகளை பலப்படுத்தும் விடயத்தில் ரணில் தன்னை ஏமாற்றி விட்டதாக விக்னேஸ்வரன் கூறுகிறார். யாப்பில் உள்ளபடி மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் பலவற்றை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் உருவி எடுத்து விட்டன. அவ்வாறு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு ஒரு குழுவை உருவாக்கி, அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இயங்குவது என்று ரணில் விக்னேஸ்வரனுக்கு ஒப்புதல் கொடுத்தார்.ஆனால் தன்னைப் பல மாதங்களாக அவர் ஏமாற்றி வருகிறார் என்று விக்னேஸ்வரன் கூறுகிறார்.ரணில் இப்பொழுது தெளிவாக கூறுகிறார்,காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் இல்லை என்று. அதாவது 13மைனஸ்
சஜித்தும் தெளிவாகக் கூறுகிறார்,இரண்டு அதிகாரங்களும் இல்லை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு வேண்டுமானால் போலீஸ் அதிகாரம் தரலாம்.அதாவது சுற்றுச்சூழல் போலீஸ். இதற்குமப்பால் சஜித்திடமும் அது தொடர்பாக தெளிவான வாக்குறுதிகள் இல்லை.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபொழுது, அவர் யாழ்ப்பாணம் பிஷப் ஹவுஸில் கத்தோலிக்க மத குருக்களைச் சந்தித்தார். சந்திப்பின்போது அவர் வாக்குறுதியளிக்கும் 13 பிளஸ்இற்குள் காணி போலீஸ் அதிகாரங்கள் உண்டா என்று ஒரு மதகுரு கேட்டிருக்கிறார்.காணி அதிகாரம்,போலீஸ் அதிகாரம் போன்றன உடனடிக்கு விவாதிக்கப்படக்கூடிய விடயங்கள் அல்லவென்றும்,அவை தேசிய மட்டத்தில் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது 13 மைனஸ்.
மூன்றாவது அனுர, அவர் மாகாண சபையை இப்போது இருக்கும் வடிவத்தில் ஏற்றுக்கொள்வார் போல் தெரிகிறது.ஆனால் அவருடைய கட்சி நீதிமன்றத்திற்கு சென்று பிரித்த வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பது தொடர்பாக ஒரு வார்த்தையும் கூறவில்லை.அது தமிழ் மக்களின் தாயகம் என்றும் அவர் கூறவில்லை.அதோடு ஏனைய இரண்டு வேட்பாளர்களைப்போலவே காணி போலீஸ் அதிகாரம் தொடர்பாக அவரிடமும் தெளிவான வாக்குறுதிகள் இல்லை.
அதாவது மூன்று பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களும் நடப்பில் பிரயோகத்தில் உள்ள 13ஐக்கூடக் கடக்கத்தயாரில்லை.சமஷ்டி எல்லாம் தரமாட்டார்கள்.ஆனால் யாப்பை திருத்துவோம் என்று பொதுப்படையாகச் செல்வார்கள்.
ஆயின்,யாராவது தென்னிலங்கை வேட்பாளருக்கு தமிழ் வாக்குகளைத் திரட்டிக் கொடுக்க முற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த மூவரில் யாரை நோக்கிக் கையை நீட்டப் போகிறார்கள்? எல்லாருமே 13மைனஸ்தானே? யாரும் சமஸ்டியைத் தருவதாகக் கூறவில்லையே?
அவர்கள் தங்களுடைய சிங்கள வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.நேர்மையாக இருக்கிறார்கள்.பொய் சொல்லவில்லை. இதைத்தான் தமிழ்மக்களுக்கு கொடுப்பேன் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
சரி,அவர்களுக்கு தமிழ் வாக்குகளை சாய்த்துக்கொடுக்க வேண்டும் என்று தலைகீழாக உழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இதில் யாரைத் தெரிவு செய்யப் போகிறார்கள் ?
யாரையும் தெரிவு செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறார்கள். அதாவது தென் இலங்கை வேட்பாளர்களில் யாரோடும் சமரசம் செய்ய முடியாத நிலை. அதற்காக தமிழ் பொது வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இதன் பொருள் என்ன ?
சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுபோல தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தரக்கூடும் என்பதைப் பார்த்து முடிவெடுப்போம் என்று அவர்கள் கூறுவது உண்மை இல்லையா? அப்படியென்றால் வேறு எந்த அடிப்படையில் அவர்கள் முடிவெடுக்க போகின்றார்கள்?
யாழ்ப்பாணம் பிஷப் கவுசில் கலந்துரையாடும் பொழுது,சஜித் பிரேமதாச பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிறுத்துவது தமிழ் மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமை என்று கூறியிருக்கிறார். அதே சமயம் தனிப்பட்ட முறையில் அது பொது வேட்பாளர் மட்டுமல்ல பொதுவான பேரழிவாகவும் அமையும் என்று கூறியிருக்கிறார்.
அது என்ன பேரழிவு? தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளை ஒரு பொது வேட்பாளருக்கு கொடுப்பதனால் என்ன அழிவு வந்து விடப் போகிறது ? யாருக்கு அழிவு வரப்போகிறது?தமிழ் மக்களுக்கா?அல்லது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கா?அல்லது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கா ?
தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான் தங்களுடைய முதன்மை நோக்கம் என்று பொது வேட்பாளர் அணியினர் கூறுகிறார்கள்.மேலும் தமிழ் அரசியலில் நேர்மையான கண்ணியமான ஒரு அரசியல் பாரம்பரியத்தை பலப்படுத்துவதுதான் தங்களுடைய அடுத்த நோக்கம் என்று கூறுகிறார்கள். அதாவது நமது வாக்காளர்களுக்கு பொறுப்புக்கூறும் ஓர் அரசியல் பாரம்பரியத்தை பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். இவை எப்படிப் பேரழிவில் முடியும்?தமிழ்மக்கள் தங்களைப் பலப்படுத்துவது பேரழிவா? தமிழ்மக்கள் தங்களை ஒற்றுமைப்படுத்துவது பேரழிவா? தமிழ் அரசியலை ஒரு சரியான பண்பாட்டில் தடம் ஏற்றுவது பேரழிவா? தென்னிலங்கை வேட்பாளர்களிடம் ஏமாற மாட்டோம் என்று கூறுவது பேரழிவா?
சஜித் அதைத் தனிப்பட்ட அபிப்பிராயமாகச் சொல்லியிருக்கலாம்.ஆனால் அதுதான் மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களின் அபிப்பிராயம். சஜித்துக்கு போகக்கூடிய வாக்குகளை தமிழ் பொது வேட்பாளர் கவர்வாராக இருந்தால், அது தனக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம் என்று கருதக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர்கள் உள்ளூர சந்தோஷப்படலாம். ஆனாலும் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பலப்படுத்தப்படுவதை அவர்கள் பேரழிவாகத்தான் பார்ப்பார்கள்.
ஏனென்றால், தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதில் இருந்துதான் இலங்கை இனப்பிரச்சினை தொடங்குகின்றது. இலங்கை இனப் பிரச்சனை என்பது இலங்கைத் தீவின் பல்லினச் சூழலை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான்.இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள மறப்பது. ஆனால் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் அமைப்புகள் தமிழ் மக்களை ஒரு தேசம் என்று அழைக்கின்றன. ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் உச்சபட்சமான ஒரு தீர்வைக் கேட்கிறார்கள்.
அவ்வாறு உச்சபட்சமான தீர்வைக் கேட்பது அல்லது தங்களை ஒரு தேசமாக மேலும் பலப்படுத்திக் கொள்வது போன்றன பேரழிவாக முடியும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருதுவது புதியதல்ல. தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பதுதான் இனப்படுகொலையே.தமிழ்மக்களை ஒரு தேசமாகக் கூட்டிக்கட்டும் அம்சங்களை அழித்து விட்டால் தமிழ் மக்கள் நீர்த்துப் போய் விடுவார்கள்;சிதறிப்போய் விடுவார்கள்.கடந்த 15 ஆண்டுகளாக அதைத்தான் அரச திணைக்களங்களும் புலனாய்வு கட்டமைப்பும் அரசாங்கத்துக்குச் சேவகம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகிறார்கள்.எனவே தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது தென்னிலங்கைக்கு பிடிக்காது. ஆனால் அது தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் பிடிக்கவில்லை. ஏன் ?
பொது வேட்பாளரைத்தவிர வேறு எந்த ஒரு தெரிவும் தமிழ் வாக்குகளை பல துண்டுகளாக உடைக்கும். எப்படி என்றால் தமிழ் வாக்காளர்களில் ஒரு பகுதி இயல்பாகவே வாக்களிப்பில் கலந்து கொள்ளாது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்குமோ இல்லையோ ஒரு தொகுதி இயல்பாக வாக்களிப்பதில்லை. இது ஒரு தொகுதி. இரண்டாவது தொகுதியினர், அது சிறிய தொகுதியாக இருந்தாலும் அனுரவுக்கு வாக்களிப்பார்கள். மூன்றாவது தொகுதியினர்,ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை நிமித்தப் பாடுபடுகிறார் என்று நம்பக்கூடிய மிகச்சிறிய தொகை படித்த ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்கள்.அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கக் கூடும்.நான்காவது தொகுதி தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்க போகிறது.ஐந்தாவது தொகுதி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும்.
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஒருமித்த முடிவை எடுக்கவில்லையென்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு ஐந்து தரப்புகளால் பங்கிடப்படும். இது எங்கே கொண்டு போய்விடும்?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கட்சிக்குள் நடந்த ஒரு தேர்தல் தமிழ் மக்கள் கேவலமான விதங்களில் துண்டாடப்படுகிறார்கள் என்பதைக் காட்டியது. அதுபோல இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்கள் தோல்வி கரமான விதத்தில் சிதறடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை வெளியே கொண்டுவரக் கூடும்.
அதை தடுக்க வேண்டுமானால் ஏதோ ஒரு மையத்தில் தமிழ் வாக்குகளைத் திரட்ட வேண்டும். எந்த மையத்தில் அதை திரட்டுவது?
சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு தமிழ் மக்களைத் திரட்டலாமா? அல்லது ரணிலுக்கு,அல்லது அனுரவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுத் திரட்டுவதா? அல்லது பகிஷ்கரிப்பு என்று கேட்டுத் திரட்டுவதா? அல்லது பொது வேட்பாளரை நோக்கித் திரட்டுவதா? இதில் எது அதிகம் பாதுகாப்பானது?
ஒரு பொது வேட்பாளரை நோக்கித் திரட்டுவதுதான் அதிகம் பாதுகாப்பானது. ஒரு பொது வேட்பாளரை நோக்கித் தமிழ் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் திரட்ட முடிந்தால், அது இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் மக்கள் பெற்ற மகத்தான வெற்றியாக அமையும். அந்த வெற்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கக்கூடிய எல்லா தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.
இல்லையென்றால், ஏற்கனவே சிதறிப் போயிருக்கும் தமிழ் வாக்குகள் மேலும் சிதறடிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது இருக்கிற தமிழ் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடலாம். குறிப்பாக திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குச் சவாலாக ஏனைய தமிழ்த் தேசியக் கட்சி ஏதாவது இறங்கினால்,இப்பொழுது சம்பந்தர் அனுபவிக்கும் அந்த ஆசனம் கிடைக்காமல் போகக்கூடும். கிழக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கட்சிகள் கைப்பற்றுவது சவால்களுக்கு உள்ளாகும். வடக்கு மாகாண சபையிலும் முன்னம் கிடைத்த பெரும்பான்மை கிடைப்பது கடினம்.தவிர மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை காரணமாக வெளியேறும் வாக்காளர்களின் தொகை அதிகரித்தால்,அதுவும் தமிழ் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். எனவே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் தேர்தல் அரசியலிலும் தோல்விகரமான ஒரு சூழல் ஏற்படும்; தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியலிலும் வீழ்ச்சிகரமான ஒரு சூழல் ஏற்படும்.அதுதான் உண்மையான பொருளில் பேரழிவாக அமையும்.