சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கப்போவதில்லை என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்தார்.
மீண்டும் தோ்தலுக்காக இனவாதத்தைக் கையிலெடுக்கும் செயற்பாடுகளை குருந்தூா் மலை விவகாரம் ஊடாக தென்னிலங்கை வேட்பாளா்கள் மேற்கொள்ளக்கூடும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
எனவே தமிழ் மக்கள் இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுடன், பறிபோகும் நிலங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவா் தொிவித்தாா்.
இத்தோ்தலில் போட்டியிடவுள்ள மூன்று வேட்பாளர்களும், யுத்தத்தை ஆதரித்தவர்கள், யுத்தம் நடக்க காரணமாக இருந்தவர்கள் அதாவது தமிழ் மக்களின் இன அழிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் என்றுதான் கூறவேண்டுமென கந்தையா சிவனேசன் மேலும் தொிவித்தாா்.
இப் பிரதேசத்திற்கு மிகிந்தலையில் இருந்து யாத்திரை வருவதனை பிழையான விடயமாக கருதவில்லை. தமிழ் பிரதேசத்திலிருந்து கதிர்காம கந்தனை வழிபடுவதற்காக யாத்திரை செல்கின்றோம். ஆனால் இங்கே வருபவர்களது யாத்திரை வெறுமனே வழிபாட்டுக்கான யாத்திரையாக நாம் கருதவில்லை, இது இப்பிரதேசத்திலே இருக்கும் மக்களுக்கு ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துவதே நோக்கம் எனவும் அவா் குறிப்பிட்டாா்.
அத்துடன், குருந்தூர் மலையினுடைய தொன்று தொட்ட வரலாற்றில் இந்த பிரதேசம் ஆதிசிவன் ஐயனார் ஆலயமாக மக்களால் தொடர்ச்சியாக பூசிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மிக அண்மை காலங்களாக இப்பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகின்றது எனவும் அவா் தொிவித்தாா்.
அத்துடன், குருந்தூா் மலை விவகாரத்தில் மிகிந்தலையில் இருந்து யாத்திரைகள் மேற்கொள்ளப்படும் விடயமானது தோ்தலை அடிப்படையாகக் கொண்ட பின்னணில் மேற்கொள்ளப்படுவதாகவும், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் மேலும் தொிவித்தாா்.