இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க, இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சமீபத்திய சம்பவத்தைக் கோடிட்டு, காட்டியுள்ள தமிழக முதலமைச்சர், இதுபோன்ற சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பது மட்டுமல்லாமல் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் அவர்களின் குடும்பங்கள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு இடையே நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கடந்த 18ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, 162 மீன்பிடி படகுகளுடன், 15 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடிக்கும் சுதந்திரத்தை உறுதி செய்யவும்,உரிய இராஜதந்திர வழிவகைகள் மூலம், இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.