செங்கடல் வழியாகச் சென்ற லைபீரியா கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியதோடு, குறித்த கப்பலின் மாலுமி உயிரிழந்துள்ளார் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய இராணுவத்தின் கடல் வர்த்தகக் கண்காணிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைபீரியா கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி. டியூட்டர் என்ற கப்பல் மீதே ஹவுதி கிளர்ச்சியாளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் குறித்த கப்பல் பலத்த சேதமடைந்த நிலையில், கடலில் மூழ்கியுள்ளதாகவும், கப்பலின் மாலுமி இதனால் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கப்பலில் இருந்த ஏனையவர்களை அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். பிலிப்பின் சீ போர்க் கப்பல் மீட்டுள்ளதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கப்பல் மூழ்கிய பகுதியில் அதன் உடைந்த பாகங்களும் எண்ணெயும் மிதப்பதை பிரித்தானிய கடற்படை கண்டறிந்தது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக கடலுக்குள் மூழ்கிய இரண்டாவது சரக்குக் கப்பல் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா- இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் ஈரானின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாகக் கூறினாலும், அனைத்துக் கப்பல்களும் தற்போது குறிவைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனால், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹவுதிகளின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதிகளில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவ்வப்போது தாக்குதல்களையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.