தமிழகம் – கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய கோவிந்தராஜ், அவரது மனைவி 42 வயதுடைய விஜயா ,; 40 வயதுடைய தாமோதரன் ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதொடு , 100ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.
கள்ளச்சாராயம் அருந்திய 42 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதேபோன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் அருந்திய 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 35 பேர் உயிரிழ்ந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை நிவைடைந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று விஜய் பதிவிட்டுள்ளார்.