நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பதுண்டு. நாட்டில் உள்ள லிபரல்கள், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோரின் கோரிக்கைகளும் அவ்வாறு இருப்பதுண்டு.தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், தமிழ் மக்கள் அதிகம் கொன்றொழிக்கப்பட்ட காலம், துன்பப்பட்ட காலம், இன அழிப்புக்கு உள்ளாகிய காலம், ஜனாதிபதி முறைமையின் கீழான காலம்தான்
இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை எனப்படுவது இரும்பு மனிதர்களைத்தான் தோற்றுவித்திருக்கின்றது. இந்த இரும்பு மனிதர்கள் எப்பொழுதும் ஜனநாயக விரோதமானவர்கள். சிறிய தேசிய இனங்களுக்கும் எதிரானவர்கள். இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியதற்கு அது மிகப் பிரதான காரணம்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் முன்னைய காலங்களில் ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுவாக முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால் இம்முறை அப்படி ஒரு கோரிக்கையை யாரும் தொடர்ச்சியாக முன் வைப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்படவில்லை என்பதை இப்போதிருக்கும் ஜனாதிபதியே ஒருமுறை சுட்டிக்காட்டியதாக ஞாபகம்.
அப்படி என்றால் இப்போது இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் நிறைவேற்று அதிகாரமுடைய அந்த கதிரையை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார்களா ?
ஜனாதிபதி முறைமை தொடர்பான இந்த அடிப்படை கேள்விகளை எழுப்பாமல், இந்த அடிப்படைப் பிரச்சினையில் கை வைக்காமல் “நான் ஜனாதிபதியாக வந்தால் என்ன செய்வேன்” என்றுதான் எல்லா ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைதான் இந்த நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்று மூலம் என்பதனை ஏன் அவர்கள் சுட்டிக் காட்டவில்லை? பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், ஆயுத மோதல்கள் இல்லாத ஒரு பின்னணியில், அப்படிக் கூற வேண்டிய தேவை அவர்களுக்கு வரவில்லையா? அல்லது மறைமுகமாக அவர்கள் அனைவரும் அந்த முறமையை ஆதரிக்கின்றார்களா ?
இதற்கு முந்திய ஜனாதிபதித் தேர்தல்களின் போது பெரும்பாலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அந்த முறைமையை அகற்ற வேண்டும் என்று கூறித்தான் வாக்கு கேட்பார்கள். ஆனால் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டால் அந்த வாக்குறுதியை அவர்கள் மறந்து விடுவார்கள். ஏன் மறந்து விடுகிறார்கள்? ஏனென்றால் அந்தக் கதிரையின் சுகம் அப்படி. அந்தக் கதிரையின் பலம் அப்படி. ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களைக் கொண்ட பதவி அது.ஜே.அர்.
ஜெயவர்தனாவின் வார்த்தைகளில் சொன்னால் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது தவிர மற்ற எல்லா அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யலாம்.
ஆனால் கடந்த பல தசாப்த கால அனுபவமானது நாட்டை அதிசயங்கள் அற்புதங்களின் சொர்க்கமாக மாற்றவில்லை.மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீவாகவும் மனிதப் புதைகளின் தீவாகவும் ஐநாவில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படும் நாடாகவும் தான் அதை மாற்றியிருக்கின்றன.
அப்படி என்றால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு தீங்கானது என்று தானே பொருள்? எனவே அதை அகற்ற வேண்டும். ஆனால் இம்முறை எந்த ஒரு பிரதான வேட்பாளரும் அதை அகற்ற வேண்டும் என்பதனை ஒரு பிரதான வேண்டுகோளாக, வாக்குறுதியாக முன் வைக்கவில்லை.
இது எதைக் காட்டுகின்றது? நாடு அடிப்படைப் பிரச்சினைகளைத் தவிர்த்து விட்டு அல்லது பிரச்சனையின் அடிப்படைகளை ஆழமாக நோக்காமல் மேலோட்டமாக எல்லாவற்றையும் அணுகி வருகிறது என்பதைத் தானே?
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையால் ஒப்பீட்டளவில் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் தான். இரும்பு மனிதர்களின் மிருகப் பிடிக்குள் இன அழிப்புக்கு உள்ளாகியது தமிழர்கள்தான். ஆனால் தமிழ்த் தரப்பில் அது தொடர்பாக ஏதும் உரையாடப்பட்டிருக்கிறதா ?
பிரதான தமிழ்க் கட்சிகள் அதை ஒரு பேசு பொருளாக மாற்றவில்லை. மாறாக ஒரு கட்சி பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறுகிறது. இன்னொரு கட்சிக்குள் ஒரு பிரிவு தென் இலங்கையில் யாராவது ஒரு வேட்பாளரோடு சமரசத்துக்கு போகலாமா என்று காத்திருக்கின்றது. இன்னொரு தரப்பு பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது.
ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்தக் கோரும் தரப்புக்களும் இந்த விடயத்தை பெரிய அளவில் பேசவில்லை. ஆனால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் எனப்படும் கருத்துருவம் தென்னிலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மனிதர்களுக்கு எதிரானதுதான். அதனால் தான் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் சமூகங்கள் தமது தீர்மானத்தில் அதை வேறு வார்த்தைகளில் கூறியிருந்தன. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நாம் நிராகரிப்பதாக அதாவது இரும்பு மனிதர்களை தெரிந்தெடுக்கும் தேர்தல் என்ற அடிப்படையில் அதை நிராகரிப்பதாக, குடிமக்கள் சமூகங்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளன.எதிர்காலத்தில் அதை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் அமைப்பானது தெளிவாக முன்வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தென்னிலங்கையில் இரும்பு மனிதர்களாக வர ஆசைப்படும் தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்துவிட்டு தமிழ் மக்கள் தங்களுடைய குறியீடாக ஒருவரை நிறுத்தும் முயற்சிதான் தமிழ்ப் பொது வேட்பாளர்.
தென்னிலங்கையில் இதுவரையிலும் தெரிவு செய்யப்பட்ட இரும்பு மனிதர்கள் தமிழ் மக்களை ஒன்றில் ஒடுக்கியிருக்கிறார்கள். அல்லது தமிழ் மக்களின் ஆணைக்குத் துரோகமிழைத்து இருக்கிறார்கள்.
எனவே இரும்பு மனிதர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய அபிலாசைகளின் குறியீடாக,தங்களுடைய தேசிய ஐக்கியத்தின் குறியீடாக முன் வைக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டை முன் நிறுத்தி, அதற்கு வாக்கு சேகரிக்க முயற்சிப்பதுதான் ஒரு தமிழ் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு ஆகும்.
பெருமளவுக்கு தென்னிலங்கை வேட்பாளர்களால் தெரிவு செய்யப்படக்கூடிய ஒரு இரும்பு மனிதரை நிராகரிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை தேர்தலைப் புறக்கணிப்பதுதான். அதாவது தென் இலங்கை வேட்பாளர்கள் யாரோடும் சமரசம் பேசத் தயார் இல்லை என்ற நிலைப்பாடு, சாராம்சத்தில் ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பதற்குச் சமம்.இந்த இடத்தில் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. ஆனால் எங்கே வேறுபடுகின்றன என்று சொன்னால், தமிழ் வாக்குகளை தமிழ் பொது நிலைப்பாட்டின் வாக்குகளாக மாற்றும் விடயத்தில் தான்.
பசிக்கரிப்பு தேர்தல் என்ற ஜனநாயக பயில்வை முற்றாக நிராகரிக்கின்றது. ஆனால் பொது வேட்பாளர் என்ற தேர்வு அதை ஓர் உபாயமாகக் கையாளுகின்றது. அரசாங்கம் இரும்பு மனிதர்களை தெரிந்து எடுப்பதற்காக நடத்தும் ஒரு தேர்தலை தமிழ்த் தரப்பு தனது நோக்கு நிலையில் இருந்து எப்படி கையாளலாம் என்ற ஒரு ஜனநாயக உபாயம் அது.
தமிழில் பழமொழி ஒன்று உண்டு. “உடையாரின் திருவிழாவில் சடையர் வானம் விட்டாராம்” என்று அதன் பொருள் என்ன? உடையார் பெருஞ் செலவு செய்து எடுப்பாகத் தன்னுடைய திருவிழாவை ஒழுங்குபடுத்த,அதில் சடையர் தன்னுடைய மத்தாப்பு வானத்தை விட்டு எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துவிட்டார் என்பதுதான். தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயமும் அதுதான். அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தமிழ்த் தரப்பு எப்படி தன்னுடைய நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தலாம் என்ற ஒரு முயற்சி.
ஆனால் அந்த உடையாரின் விழாவில் விழும் வாக்குகளை வைத்து இரும்பு மனிதர்களாக வரமுற்படும் சஜித் பிரேமதாச கூறுகிறார், அது ஒரு பேரழிவாக முடியலாம் என்று. அவ்வாறு இரும்பு மனிதராக வர விரும்பும் ஒருவருக்கு தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்க வேண்டும் என்று ஓடித் தெரியும் தமிழ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் அது ஒரு கோமாளிக் கூத்து என்று.
அது பேரழிவும் அல்ல கோமாளி கூத்தும் அல்ல. அது ஒரு ஜனநாயக உபாயம் என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.
அதுபோலவே இரும்பு மனிதர்களை ஆட்சியில் இருந்து துரத்திய சிங்கள மக்களுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.
அண்மையில் அரகலய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடாத்திய ஒரு ஊடகச் சந்திப்பில் ஒற்றை ஆட்சிக்கு வெளியே வந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தரத் தயார் என்று அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பில் அரசறிவியல் ரீதியாக அடர்த்தி மிக்க வார்த்தைகள், அதாவது சமஸ்டி, சுய நிர்ணைய உரிமை, தேசிய இனம் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. எனினும் பொதுப்படையாக ஒற்றை ஆட்சி முறமையை ஏற்றுக் கொள்வதில்லை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிங்கள மக்கள் மத்தியில் தன் எழுச்சியாக தோன்றிய ஒரு போராட்டத்தை வழிநடத்தியவர்கள் அவ்வாறு அறிவித்திருப்பதை தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும்.
அந்த மக்கள் இயக்கத்தின் பேச்சாளர்கள் அவ்வாறு கூறுவது மாற்றம்தான். அதைத் தமிழ் மக்கள் பொசிட்டிவ் ஆகவும் நிதானமாகவும் அணுகலாம்.
மக்கள் அமைப்பினர் அவ்வாறு கூறியிருப்பது, ஏனைய மூன்று பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும் சவால்களை ஏற்படுத்தும். அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மேலும் தெளிவாகவும் துணிச்சலாகவும் கருத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, யாராவது ஒரு தென் இலங்கை வேட்பாளருக்கு தமிழ் வாக்குகளை வளைத்துக் கொடுக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அங்கே செய்தி உண்டு.