வில்பத்து, விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை இறால் பண்ணைத் திட்டத்திற்காக ஒதுக்கி, வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்கான அனுமதியையும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மீன் வளர்ப்பு தொழில்பூங்காவை அமைப்பதற்காக, மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை முடிவிற்கு கொண்டு வருவதாக கடந்த மேமாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியிருந்தது. இந்த வர்தமானி அறிவித்தலுக்கே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து என்பது மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை எல்லைகளாகக் கொண்ட பிரபல விலங்குகள் சரணாலயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக கடந்த 2016ஆம் ஆண்டில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட விடத்தல்தீவு இயற்கைப் பிரதேசத்தை நீக்குவதற்கான முயற்சி இடம்பெற்றிருந்தது.
நாட்டில் பிரசித்திப்பெற்ற சதுப்புநில காடுகளைக் கொண்ட பிரதேசமாக விடத்தல்தீவு விளங்குவதுடன் தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் புகழிடமளிக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடற்றொழில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இப்பிரதேசத்தின் பெருமளவான பகுதியை வர்த்தமானியிலிருந்து நீக்குவதகு கடந்த 2016ஆம் ஆண்டு அரசாங்கம் முயற்சித்திருந்தது.
எனினும் இவ்வாறானதொரு முன்மொழிவு பூர்வாங்கமாக 2007 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டது. இப்பிரதேசத்தின் 1000 ஹெக்டயர் பரப்பளவை இறால் வளர்ப்பிற்காக ஒதுக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன் 2019ஆம் ஆண்டில், ஏறக்குறைய நடந்தேறவிருந்த பாரியளவான அழிவை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, சுற்றுச்சூழலியலாளர்கள் ஒன்றுசேர்ந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.