இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் துணை நதிகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 8 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கச்சார், தேமாஜி, மோரிகான், திப்ருகார், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தவாம்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் முழுவதும் தொடர் மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்க ளுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
எனவே அவசர நிலையை சமாளிக்க இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என அசாம் முதலமைச்சர் Himanta Biswa Sharma தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று டெல்லி, அரியானா, அசாம் மற்றும் குஜராத் உட்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.