எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிடுவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதனை ஜோ பைடன் தரப்பு பிரச்சாரக் குழு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த மின்னஞ்சலில், “ஜனநாயக கட்சியின் வேட்பாளார் நான் தான். நான் போட்டியில் நீடிக்கின்றேன். யாரும் என்னை விலகும்படி சொல்லவில்லை. நானும் இதிலிருந்து வெளியேறவில்லை. இறுதிவரை போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். நவம்பரில் ட்ரம்பை வீழ்த்த எனக்கும், கமலா ஹாரிஸுக்கும் உதவுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க தொலைக்காட்சியொன்றினால் ஒளிபரப்பப்பட்ட, தேர்தலுக்கான முதல் விவாத மேடையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் பங்கேற்றிருந்தனர்.
இதில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி தொனியில் பேசியபோது ஜோ பைடன் சற்று அமைதி காத்தமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவாதத்தின் போது ட்ரம்புக்கு பைடன் பதிலடி கொடுக்க முயற்சித்தபோதும், அவர் தடுமாறியமை, நேரலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
இதனையடுத்து, வேட்பாளர் ஜோ பைடன் மாற்றப்படலாம் என்ற கருத்து நிலவி வந்த நிலையில், தற்போது ஜோ பைடன் தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.