இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (08) முதல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்”சுமார் 1 இலட்சம் மக்கள் தோட்டத் தொழிலை நம்பி உள்ளனர். அவர்களை நம்பி சுமார் 8 லட்சம் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு அரசாங்கமாக இருக்கட்டும், தொழிற்சங்கங்களாக இருக்கட்டும் அனைவருமே முழு முயற்சியுடன் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். மக்களும் இதற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
என்னை பொறுத்த வரைக்கும், நான் இந்த நாள் கூலி சம்பளம் முறைமையை எதிர்க்கின்றேன். ஒரு மாற்று முறைமை தேவை.
ஆனால், அந்த மாற்று முறைமை வரும் வரைக்கும் ஒரு நியாயமான சம்பளம், வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளம் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
என்னை பொறுத்த வரைக்கும் இன்றில் இருந்து மக்கள் அவர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிக்காட்டுவார்கள். அவர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் ” இவ்வாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.