ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அண்மையில் பெயரிடப்பட்டது.
தொழிலதிபர், சி.டி.லெனவவினால் கடந்த புதன்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவில் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைகாலத் தடை உத்தரவினைப் பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்டத்தின் முன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.