இந்தியா – ரஷ்யா இடையிலான 22 ஆவது வருடாந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் மோடி பங்கேற்றதையடுத்து, 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பையேற்று, மீண்டும் அவர் சென்றுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்துக்கு சென்றடைந்த நரேந்திர மோடிக்கு அரசு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விடுதிக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் ரஷ்ய கலைஞர்கள், ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தனது மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட முறையில் விருந்தளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோடி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் எனவும், இதனையடுத்து தலைநகர் மொஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடனும் இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடந்துள்ளன. இறுதியாக, டில்லியில் இந்திய- ரஷ்யா உச்சி மாநாடு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இதில் நேரடியாக பங்கேற்றதோடு, குறித்த மாநாட்டில் இந்தியா – ரஷ்யாவுக்கு இடையே 28 இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.