ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தாலும், சில ரயில்களின் சேவைகள் இன்று ரத்து செய்யப்படலாம் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் செய்துகொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, நேற்று நள்ளிரவு தொடக்கம் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புவவதான தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்குள் பணிக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன, தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
பணிக்கு வராத அதிகாரிகள் யாராவது இருப்பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.