கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். தொடா்ந்து இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த அமைச்சா்,
தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. கடந்த காலங்களில் இடைநடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நாம் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம்.
எங்களுடைய நாடு மிகவும் பொருளாதார பின்னடைவில் இருந்து பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த காலகட்டத்தில் அதிலிருந்து மீண்டதை அனைவரும் நன்கு அறிவர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பினார்.
கடந்த காலங்களில் நாடு பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமையினால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அக்காலத்தில் நடத்தி நடத்தி முடிக்கப்படாமல் இருந்து திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் கிடைக்க பெற்றுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவர முடியுமாக இருக்கின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி , சவுதிஅரேபியா போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற கடன் மூலம் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தொிவித்துள்ளாா்.