ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர்.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கருத்துத் தெரிவிக்கையில்” தேசத்தைப் பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு அவருக்கு ஆதரவு வழங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியில் எங்களின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்ளவும் ஜனாதிபதி தற்போது முன்வந்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் நாங்கள் மேடையில் இருக்க விரும்பவில்லை.
இதனால் இந்த வாய்ப்பை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் ஜனாதிபதி இருப்பதாகத் தெரிகிறது.
ஏனெனில் அவர் முன்னர் கூறியது போல் பதினைந்து முதல் இருபது வரையிலான ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்களின் ஆதரவைப் பெற முடியாது.
எவ்வாறாயினும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது எங்களுக்கு சாதகமாக அமையும். எனவே ரணில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நாம் விரும்புகின்றோம்” இவ்வாறு எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.