மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைப் பாரியளவில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மூன்று ஆண்டுகளில் மின் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று
அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் ஜூலை மாதம் திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டது.
இந்த மின் கட்டணத் திருத்தம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது. அடுத்த கட்டணத் திருத்த முன்மொழிவை ஒக்டோபர் மாதத்தில் வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களைப் பொருத்தவரை, மழை வீழ்ச்சியும் அதிகரித்துள்ளது.
அதனால், நீர் மின் உற்பத்தி அதிகரித்தது. மேலும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மின் உற்பத்திச் செலவைக் குறைத்தால் எதிர்காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும்.
அதற்கு குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மின் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும். இந்தப் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணித்து அதனை நிறைவு செய்யவும் எதிர்பார்க்கின்றோம்” இவ்வாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.