அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்னரே அமெரிக்க அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதுடைய தோமஸ் மேத்யூ க்ரூக்ஸுக்கும், ஈரானிய சதிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சதி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், இது ஆதாரமற்ற, ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஐ,நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,
ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி எனவும், ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டொனால்ட் ட்ரம்பை, ஈரான் சட்டத்தின் வழியிலேயே சந்திக்கும் எனவும் ஐ நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பென்சில்வேனியா மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை கிடைத்ததாகவும், இது குறித்து ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ட்ரம்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள்,
இந்த சதித் திட்டம் பற்றி தாம் முன்னதாகவே அறிவித்ததை தற்போது, ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்புக் குழு மறுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை பென்சில்வேனியாவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில், அவரது காதில் காயம் ஏற்பட்ட நிலையில் நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.