ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் மறுசீரமைப்பு போன்றவை இலங்கையின்
எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற 2024 இலங்கை மனித மூலதன உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த மாநாட்டில் உரையாற்றும் போது ஸ்கொட் மொரிசன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அசாதாரணமான பணியை செய்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், சமூக பாதுகாப்பு வலையமைப்பின் மறுசீரமைப்பு போன்றவை இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான ஒத்துழைப்புடன் பாதுகாப்பு,
இறையாண்மை மற்றும் பொருளாதார வெற்றியைப் பலப்படுத்தக்கூடிய நாற்கரத் தலைவர்களின் உரையாடல் மூலம்,
பிராந்திய பங்காளித்துவங்களில் இலங்கை தீவிரமாக ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் வலியுறுத்தியிருந்தார்.