சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் அமைந்துள்ள பாலம், நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்காலும் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில், ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தேசிய தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழு 736 பேர், 76 வாகனங்கள், 18 படகுகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்கள் என்பன மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும்” என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.