நாடு வங்குரோத்து நிலையினை அடைந்து கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த தருணத்தில் தனி ஒருவராக முன்வந்து நாட்டைப் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு வருடங்களைக் கடந்து பயணிக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
நெருக்கடி நிலைமைகளில் நாட்டைப் பொறுப்பேற்கத் தவறிய தலைவா்களுக்கு மத்தியில் தற்துணிவுடன் தனது அரசியல் சாணக்கியம் மற்றும் இராஜதந்திர நகா்வுகளின் மிக நீண்ட அனுபவங்களைக் கொண்டு இலங்கைத் தீவினை சற்றே மூச்சு விடக்கூடிய நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளாா் என்பதை அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
மிகக் குறுகிய காலத்தில் அவரது சரியான முகாமைத்துவம் மட்டுமே உலகத்தினதும், நாட்டினதும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிவகுத்தது.
அந்த வகையில் தடம் புரண்டு ஓடிய இலங்கையின் பொருளாதாரத்தை சரியான தடத்தில் ஏற்றி வைத்தவர் என்றே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காண முடிகிறது.
2022 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.8 சதவீதத்தினால் திண்டாட்டம் கண்டது. வௌிநாட்டு கையிருப்பு வற்றிப் போய், பணவீக்கம் உக்கிரமாக காணப்படும் நாடுகளின் வரிசைக்குள் இலங்கையும் நின்ற வேளையில், நாட்டு மக்கள் உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும், உரத்திற்காகவும் வரிசையில் காத்துக்கிடந்ததை எல்லாம் எவராலும் எளிதில் மறந்துவிடமுடியாது.
வா்த்தகங்கள் முற்றாக முடங்கிப் போனதால் வருமான வழிகளும் மறைந்து போயின. வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு பாடசாலைகள் மூடிக்கிடக்கிடந்தன. நாளாந்தம் 10 – 12 மணித்தியாலங்கள் மின்வெட்டு என்று மக்களின் அத்தியாவசிய வாழ்க்கைக்குத் தேவையான பல விடயங்களை இழந்து தவித்ததால் நாட்டின் செயற்பாடுகள் தலைகீழான நிலைமையில் காணப்பட்டன.
கடன் செலுத்து முடியாமல் அல்லல் பட்ட நாடு!
2022 ஆம் ஆண்டில் பல வகைகளில் இலங்கை கடும் நெருக்கடி மற்றும் ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்திருந்தது. அந்த ஆண்டில் படுகடனை செலுத்த முடியாமல் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.
அது வரையில் இந்த நாடு அப்படியொரு நிலையை கண்டிருக்கவில்லை. ஒரு நாடு என்ற வகையில் வௌிநாடுகள் கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திக்கொண்டன. வௌிநாடுகளின் கடன் உதவியில் நடைமுறைப்படுத்திய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் அந்த நாடுகள் இடைநிறுத்திக் கொண்டன.
இப்படியே ஆறு காலாண்டுகள் அல்லாடிக் கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிறு வளர்ச்சியை காட்டி நசுங்கி கிடந்த நாட்டுக்கு மூச்சு விட வழிகாட்டியது. அதற்கு ஆதாரமாக 5500 மில்லியன் டொலர்களாக நாட்டின் வௌிநாட்டு கையிருப்பு உயர்வை காட்டியது. 70 சதவீமாக எகிறி குதித்த பணவீக்கம் 0.9 சதவீதமாக சரிவடைந்தது.
இவ்வாறான செயற்பாடுகள், வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்கும் முயற்சிகள், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் எமக்கு கிடைத்த வெற்றி. சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இழந்து தவித்த அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுத்தந்தன.
கடந்த இருவருடங்கள் முன்னெடுத்த கடுமையான அர்ப்பணிப்பின் பலனாக 2043 வரையில் கடன் செலுத்துவதற்காக காலத்தை நீடித்கொள்ள முடந்துள்ளமையும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து 15 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செய்து முடித்த நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணியில் நிற்பதும் பெரு வெற்றியாகும்.
தொங்கு பாலத்தில் தொடரும் பயணம்
பொருளாதார நெருக்கடியால் நசுங்கிக் கிடந்த நாடு இப்போது ஸ்திர நிலையை எட்டியிருக்கிறது.
நெருக்கடியை பற்றி ஜனாதிபதிக்கு இருந்த தெரிவும் தெளிவும், அதற்கான தீர்வுகளையும் தேடித்தர வழிவகுத்தது. அதனால் ஆபத்தான தொங்கு பாலத்தை கடந்து இலங்கை அன்னையை மீட்டு வருவதாகச் சொன்ன ஜனாதிபதி, வார்த்தைகளாக மட்டும் விட்டுவிடாமல் நடைமுறையில் அதனைச் செய்து காட்டினார். தொங்கு பாலத்தில் கடந்து வந்த பயணம் கடினமாக இருந்தது. ஆனால் அந்த பயணத்தில் திரும்பிச் செல்லாமல் நேர் வழியில் பயணத்தை தொடர்வதே சாணக்கியமாகும் என்பதையும் நிரூபித்துக் காட்டியுமுள்ளாா்.
அந்த பாதையை திரும்பிப் பார்க்க ஆசைப்பட்டால் மீண்டு வர 25 – 30 வருடங்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும்.
மக்களுக்கு உரிமை!
இந்நாட்டில் பல ஆட்சியாளர்களும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறினாலும் அது நடைமுறையில் நடந்ததா என்பது கேள்விக்குறியாகும். மக்கள் ஆர்ப்பாட்டத்தில் தனது வீடு தீக்கிரையானது என்பதையும் மறந்துவிட்டு இந்நாட்டில் வாழும் 20 இலட்சம் மக்களுக்கு அரச காணிகளின் உறுதிகளை இலவசமாக வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நகர பகுதிகளின் மாடிக் குடியிருப்புக்களில் வாழும் மக்களுக்கும் அந்த வீட்டு உறுதிகளை வழங்கினார்.
சுதந்திரத்தின் பின்னர் 1897 தரிசு நிலச் சட்டத்தின் கீழ் இவ்வாறானதொரு முயற்சி இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இலங்கையில் பல ஆண்டுகளாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருந்தாலும், அந்த நிலையை உருவாக்கிய விவசாயிகள் காணி உறுதியின்றி பட்ட கஷ்டங்களை நிவர்த்திக்கவே ஜனாதிபதி இந்த திட்டத்தை செயற்படுத்தினார்.
அதேபோல் மலையகத்தில் நாட்டின் முதுகெலும்பாகவிருந்து பொருளாதாரத்தை கட்டிக்காக்க உதவிய தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தி அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தீர்மானத்தையும் ஜனாதிபதி செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் 70 சதவீதமான மக்கள் காணி உறுதியுள்ளவர்களாக மாற்றப்படுவர்.
நவீன விவசாயம்
வறுமை பெருமளவில் காணப்படுவது விவசாயம் செய்யும் பகுதிகளிலாகும். அந்த வகையில் இப்பகுதிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த செயற்பாடுகளுக்கான 2024 வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதோடு,ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்தும் முயற்சிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறான நவீனமயப்படுத்தல் முயற்சிகளின் ஆரம்ப கட்டமாகவே இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் உறுமய வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும!
சாத்தியமான அபிவிருத்திப் பாதைக்குள் பிரவேசிப்பதற்கு ஒரு நாட்டின் அனைத்து மக்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
அதன்படி சமுர்த்தி நலன்புரித் திட்டத்தின் சலுகைகளை மூன்று மடங்காக அதிகப்படுத்தி அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 18 – 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அங்கவீனமானவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்த சலுகைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
ஜனாதிபதி நிதியம்
2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பித்து போனது. வைத்திய உதவிகளை கோரி விண்ணப்பித்திருந்த 9000 க்கும் அதிகமானவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலைமை காணப்பட்டது.
ஓகஸ்ட் – டிசம்பர் வரையில் 4000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அதற்காக சகல கொடுப்பனவுகளும் 2023 ஆண்டில் வழங்கப்பட்டிருப்பதால் 4917 நோயாளர்களின் விண்ணப்பங்களுக்கான 915 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மூன்று மாதங்கள் காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட சலுகைகள் 3 -5 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டிலிருந்து சகல வைத்திய நிவாரணங்களும் 50 – 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களுக்கான புலைமை பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2024 ஜனாதிபதி நிதியத்தின் புலைமை பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 116,000 மாணவர்களுக்கு புலைமை பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2015 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த காலத்தில் வழங்கிய 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. சம்பள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றும் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
அதேபோல் பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் நிலையிலிருந்த சிறு வியாபாரங்களும் மறுமலர்ச்சி கண்டு வருகின்றன. அவற்றுக்கான கடன் சலுகைகளை பெற்றுக்கொடுக்க வங்கிகளுடனும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அரச வருமானம் உயரும் போது மக்களுக்கும் நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி மறந்துவிடவில்லை.
அதேபோல் கல்வி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் முயற்சிகளுக்கான செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தி எதிர்காலத்துக்கு தேவையான கல்வியை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான முயற்சிகள் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டில் இதுவரையில் காணப்படாத புதிய வகையிலான அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவித்துள்ளார். அது பற்றிய புரிதல் அனைவருக்கும் ஏற்பட வேண்டியது அவசியமாகும்.
நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனை சகலருக்கும் வர வேண்டும் என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று 02 ஆண்டுகள் பூர்த்தியாகும் இவ்வேளையில் இந்த சாதகமான விடயங்களை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் சாணக்கியம் மற்றும் இராஜதந்திர நகா்வுகளின் மிக நீண்ட அனுபவங்களைக் கொண்டு இலங்கைத் தீவினை சற்றே மூச்சு விடக்கூடிய நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளாா் என்பதை அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது…..!