” 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லை.
தேர்தலை பிற்போடும் நடவடிக்கைகளில் ஒன்றாக ரணில் விக்ரமசிங்க திடீரென 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தைக் கொண்டுவர முயற்சி செய்கின்றார்.
பெருந்தோட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு ஆட்சியாளரும் தோட்டத் தொழிலாளர்களை பொருட்படுத்தவில்லை.
ஜீவன் தொண்டமானை அருகில் வைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்றார். உள்ளது இன்று வரை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டும் அது கிடைப்பதற்கான அறிகுறியே இல்லை என, மீண்டும் மக்களை ஏமாற்றியுள்ளனர்.
தோட்டக் கம்பனிகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கி சம்பளத்தை அதிகரிக்கவில்லை என தோட்டக் கம்பனிகளை குற்றம் சாட்டுவதையே அரசாங்கம் செய்து வருகின்றது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.