ஜனாதிபதித் தேர்தலையொட்டி வடக்கில் கடந்த சில வாரங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.வழமையாக யாழ்ப்பாணத்தின் சுவர்களை கேவிபி சுவரொட்டிகளே நிரப்புவதுண்டு.
இம்முறை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஆவிக்குரிய சபைகள் கூறுவது போல நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட ஒரு பலவண்ண சுவரொட்டியை நாடு முழுவதும் ஒ ட்டினார். பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட உதவிகள் கிடைக்கப் போவதை முன்னிட்டு அதை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சாதனையாக கருதி அவ்வாறு ஒரு சுவரொட்டியை அவர் வெளியிட்டார்.அந்த சுவரொட்டிக்கு அடுத்தபடியாக ரணில்தான் என்ற பொருள்பட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அந்த இரண்டு சுவரொட்டிகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னோக்கி ஒட்டப்பட்டவை.
அதற்குப்பின் தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு ஒரு சுவரொட்டி போட்டது. அதில் தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்த மூவருடைய படங்களைப் போட்டு “நாங்கள் ரெடி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதற்கும் சிறிது காலம் செல்ல ஜேவிபி அண்மை நாட்களாக ஒரு பெரிய பலவண்ண சுவரொட்டியை ஒட்டி வருகின்றது.அதில் அனுரகுமாரவின் பெரிய முகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.”எங்கள் தோழர் அனுர” என்றும் எழுதப்பட்டுள்ளது.
அதன் பின் நேற்று அதாவது சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி. ஒட்டியது யார் என்று தெரியாது. அது ஒரு அனாமதேயச் சுவரொட்டி. அதில் வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் “தேசமே பயப்படாதே”என்று எழுதப்பட்டுள்ளது. அதை யார் ஒட்டியது என்று தெரியாது. இனி வரும் நாட்களில் தெரிய வரலாம். முதலில் புதிர் போல ஒரு வசனத்தை போட்டு சுவரொட்டி வரும். பின்னர் அதற்கு விளக்கம் வரும். சில கிழமைகளுக்கு முன் ரணில் விக்கிரமசிங்க “இதோ நற்செய்தி வருகிறது” என்று ஒட்டியதும் அப்படித்தான்.
இவ்வாறாக தமிழ் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கி விட்டன.ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன!
தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்காக முயற்சி செய்யும் மக்கள் அமைப்பும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஏழும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்கனவே வந்துவிட்டன. கடந்த மாதம் 29ஆம் தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில் அந்த உடன்பாடு எட்டப்பட்டது. அன்றைக்கே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால் சில கட்சிகள் அந்த உடன்படிக்கை கைதாத்திடும் நிகழ்வை பெருமெடுப்பிலான ஒரு நிகழ்வாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தன.எனினும்,அதனை முதலில் ஊடகவியலாளர்களுடன் ஒப்பீட்டளவில் கைக்கடக்கமான ஒரு நிகழ்வாகச் செய்வது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆறாம் திகதி அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் அரசியலில் மூத்த தலைவராகிய சம்பந்தரின் மறைவையொட்டி அந்த நிகழ்வை ஒத்தி வைக்குமாறு கட்சிகள் கேட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட அந்த வைபவம் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் தந்தை செல்வா கலையரங்கில் அந்த நிகழ்வு இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய நகர்வுகள் கட்டமைப்பு சார்ந்து முன்னேற தொடங்கியுள்ளன என்று தெரிகிறது. கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கும் கட்டமைப்பானது அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகும் பொழுது, பொது வேட்பாளரை நோக்கித் தேர்தல் களம் மேலும் சூடாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரு பொது வேட்பாளர் என்ற விடயம் எப்பொழுதோ மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது. அதற்கு ஆதரவாக ஒரு பகுதி ஊடகங்கள் எப்பொழுதோ இயங்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் மாவை சேனாதிராஜா ஒரு நேர்காணலில் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, ஒரு புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக என்பதை விடவும், மக்களை ஒன்று திரட்டுவதற்கானது அன்று மிகத் தெளிவாகக் கூறுகிறார்.
இப்பொழுது தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் அவர்தான். அதனால் அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும் என்ற விடயத்தை தமிழ்ப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.அந்த நோக்கத்துக்காகத்தான் பொது வேட்பாளர் என்றும் அழுத்திக் கூறுகிறார்.ஏற்கனவே சிறீதரனும் அவருடைய அணியும் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பகிரங்கமாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழரசுக் கட்சிக்குள் பொது வேட்பாளருக்கு ஆதரவான அணி படிப்படியாக பலம் பெற்று வருவது தெரிகின்றது.இது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுத் தளத்தை மேலும் பலப்படுத்தும்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவது என்பது அதன் பிரயோக வடிவத்தில் தமிழ் மக்களை ஒரு பெரிய திரளாக ஐக்கியப்படுத்துவதுதான். தமிழ் மக்கள் ஐக்கியப்படும் பொழுது சாதனைகளையும் சாகசங்களையும் செய்வார்கள். தமிழ் மக்கள் இப்பொழுது தம் பலம் எதுவென்று அறியாத மக்களாக சிதறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எல்லா பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் வரும் ஒரு மக்கள் கூட்டம். அதனால் தமிழ் மக்களைக் கையாள வேண்டிய தேவை உலகின் மூன்று பேரரசுகளுக்கும் உண்டு.அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ் வாக்குகள் பொன்னானவை.கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவ்வாறு கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை கடந்த 15 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தல்களின் போது வெற்றுக் காசோலையாக வீணாக்கி வந்த ஒரு அரசியல் போக்கை மாற்றி, அவற்றை அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு, ராஜதந்திரப் பெறுமதியோடு,அரசியல் பெறுதியோடு ஒன்று திரட்டுவதே தமிழ் போது வேட்பாளரின் தேர்தல் இலக்கு ஆகும்.
இந்துப் புராணங்களில் வரும் அனுமாரைப் போல தமிழ் மக்களுக்குத் தங்கள் பலம் எதுவென்று தெரியவில்லை.அனுமார் வாயுபுத்திரர் ஆவார். காற்றைப் போல அவருக்கு சக்தி அதிகம். ஆனால் தன் பலத்தை அவர் அறிவதில்லை. அப்பாவியாக சாதுவாக இருப்பார்.ராமாயணத்தில் அவருக்கு அவருடைய பலத்தை உணர்த்தி “நீ வாயுபுத்திரன் ; ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடப்பாய்” என்று அவருக்கே அவருடைய பலத்தை உணர்த்தியது ஜாம்பவான் என்ற வானரத் தளபதி ஆகும். தன் பலம் எதுவென்று தெரிந்ததும் அனுமார் விஸ்வரூபம் எடுத்தார். ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடந்தார். சீதையைக் கண்டார்.
எனவே அனுமாரைப் போல தமிழ் மக்களுக்கும் அவர்களின் பலம் எதுவென்று தெரியவில்லை. ஒரு காலம் அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்த மக்கள்.முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டிய மக்கள். ஆனால் இன்று சிதறிப்போய் இருக்கிறார்கள். அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல அவர்கள் சிதறிப்போய் இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் கூட்டிக்கட்டினால், அவர்கள் மீண்டும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். எனவே தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பலம் எது என்பதை, அவர்களுடைய கேந்திர முக்கியத்துவம் எது என்பதனை, எடுத்துக் கூறவள்ள தலைமைகள் மேல் எழ வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் பலம் எது என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.அப்படி ஒரு முடிவுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு.
இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் தமது பொன்னான வாக்குகளை அவற்றுக்குரிய கேந்திர முக்கியத்துவத்தோடு உபயோகிப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தங்கள் ஒன்று திரண்ட பலத்தோடு எழுவார்கள்.
இதுவரையிலும் 7 தமிழ் தேசிய கட்சிகளே தமிழ் மக்கள் பொதுச்சபையுடன் உடன்பாட்டுக்கு வர இருக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஏனைய கட்சிகளும் இப்பொதுக் கட்டமைப்புக்குள் இணையக்கூடும். தமிழ் மக்கள் ஒன்றாகத் திரளும் பொழுது கட்சிகள் மக்களைப் பிரதிபலிக்கும்.
இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையில் இருப்பவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள்தான். அதில் அவ்வப்போது சிறிய சிறிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் எல்லா கட்சிகளையும் ஒரு கட்டமைப்பாக கூட்டிக் கட்டுவதில் அவர்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறார்கள்.இந்தத் தோல்வி கரமான அனுபவங்களின் பின்னணியில், இதற்கு முன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும்.
எனவே கடந்த 15 ஆண்டுகால அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொண்ட தமிழர்கள் மீண்டும் ஒரு பலமான திரட்சியாக மாறுவதற்குரிய வாய்ப்புகளை ஜனாதிபதித் தேர்தல் களம் திறந்து வைத்திருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் மக்களுடைய சுவர்களில் தங்களுடைய விலை கூடிய பல வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் மனங்களில் சிறு பொறியாகச் சுடரத் தொடங்கியுள்ள “ஒன்றுபடுவோம்” என்ற பெரு விருப்பை ஓர் அரசியல் ஆக்க சக்தியாக தமிழ் பொது வேட்பாளர் மாற்றுவாரா?