கனடாவில் இந்து மதத்தினை பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற உடல் ரீதியிலான தாக்குதல்களை தடுப்பதற்கு, கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனடாவின், இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், கோவிலின் மீது எதிர்ப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.
எனவே, இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கனடாவில், அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் இவ்வாறான பிரிவினைவாத செயல்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, இதற்கு எதிராக, கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளது.
கனடாவில் அமைந்துள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்ச்சியாக வன்முறை தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஓன்றாரியோ மாகாணத்தின் ஹம்ன்டன் நகரில் உள்ள சுவாமிநாராயண் ஆலயம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு காலிஸ்தான் என பெயரிட வேண்டும் எனவும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரி வருகின்றனர்.
அத்துடன், கனேடிய அரசாங்கம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தற்போது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனடாவில் இந்து மத ஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படம் தாக்குதல்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.