முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2022 ஆண்டு, ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று அதிகாலை, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கான நிதியினை இலங்கை விமானப்படையே வழங்கியுள்ளமை தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதுவரை இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இலங்கை விமானப்படை இன்னமும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற கோட்டா கோ கோம் (Gotta Go Home) என்ற மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டையும் மக்கள் முற்றுகையிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ச, மற்றும் அவரது மனைவியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைத்தீவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தின் மூலம் நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த பயணம் தொடர்பாக விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடக கோரப்பட்டிருந்தது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலேயே, கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த அனுமதியை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த அனுமதிக்கான ஆவணங்களை வெளியிடமுடியாது என இலங்கை விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
விமானப்படையின் போக்குவரத்துக்கள் இரகசிய தன்மை வாய்ந்ததாகவும்
எனவே அதற்கான ஒப்புதல் ஆவணத்தின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் விமானப்படை கூறியுள்ளது.