வவுனியாவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சந்தே நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக வழக்கு இடம்பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரிவு 296 கட்டளை சட்டக் கோகையின் வி-1390/23 வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிணைக்கு எதிராக விளக்கமறியல் நீடிப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 17 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரச சட்டத்தரணி ஆறுமுகம் தனுசன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பிணைக்கு எதிராக வாதிட்டு ஒரு வருட காலம் விளக்கமறியலை நீடிக்க கோரியிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 9 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கு விசாரணை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்று> அவர்களது விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.
இதன்படி மன்று 1- 6 வரையான சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 01 திகதி வரை விளக்கமறியல் நீடித்து கட்டளை
வழங்கியதுடன், 7 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.