நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தொிவித்துள்ளாா்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”நீதித்துறை தத்துவத்தை அமைச்சரவையோ நாடாளுமன்ற தெரிகுழுவோ மீளாய்வு செய்ய முடியாது.
இது அரசமைப்புக்கும் முரணானது என்பதோடு, நீதித்துறை மீதான அப்பட்டமான அழுத்தமாகவும் காணப்படுகிறது.
இந்த நிலையில். நேற்று அவசரமாக நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இருக்கிறதா? இல்லை.
நீதித்துறை பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கு இருக்கின்றது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தமான வழக்கு விசாரணை முடியும்வரை பொலிஸ் மா அதிபர் பதிவியின் பணிகளை ஆற்றுவதை இடைநிறுத்துவதே தீர்ப்பாக அமைகிறது.
இந்த பணிப்புரையை தேசபந்து தென்னக்கோன் மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக குற்றவாளியாக அவர் கருதப்படுவார்” என சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளாா்.