”ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் செயற்படுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனுவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை தோற்கடிக்க நாம் செயற்படுவோம். தேசிய வேலைத்திட்டமொன்றுடன் பயணித்த தலைவர்தான் ஜனாதிபதியாக இவ்வளவு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளார்கள் என்றுக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களில் சிலர் நேற்று இரவும் எமது வீடுகளுக்கு வந்தார்கள். சிலர் காலையிலும் வந்தார்கள்.
இவர்கள் எல்லாம் குழப்பமானதொரு மனநிலையில்தான் தற்போதும் உள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஒன்றும் புதிது கிடையாது. மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பாக நாம் இன்னும் கலந்துரையாட வேண்டியுள்ளது.
நாம் நபரை இலக்குவைத்து அரசியல் செய்யப்போவதில்லை. எமக்கு அரசியல் கொள்கைகளே முக்கியமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அவர் சிரேஷ்ட அரசியல்தலைவர் என்றவகையில், நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவார் என்றே நம்புகிறோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.