ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் என்பது குறித்து நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று அக் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்தக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு நிலைப்பாடுகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சி உள்ளிட்ட புதிய கூட்டணி ஆதரவளிக்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாளை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.