பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வரிசை யுகம் இல்லாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டுக்காக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் 92 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாம் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய கட்சி தொடர்பாக சிந்திக்காமல் ஒரு சிலரது கோரிக்கைக்கு அமைவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துவிட்டு
பொது ஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தியே இந்த சந்திப்பில் கலந்துகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்ட போது இரண்டு வருடங்களில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாடுபட்டதையும் அவர்கள் இந்த கலந்துரையாடலின் போது நினைவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.