ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றியீட்டினால் அது தனது தனிப்பட்ட வெற்றி அல்ல எனவும் , அது நாட்டின் வெற்றியாகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது ” கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
நெருக்கடியான சந்தர்ப்பங்களிலேயே முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் .தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றிபெறும். இது தேர்தலில் எனது தனிப்பட்ட வெற்றியல்ல.
கட்சியின் ஏகோபித்த வெற்றியாகும்.தேர்தலில் நெருக்கடிக்கு மத்தியில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களையும் மீண்டும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
எமது கட்சியின் கொள்கை திட்டம் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. கட்சியின் வெற்றியானது நாட்டின் வெற்றியாகும். தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” இவ்வாறு நாமல் தெரிவித்துள்ளார்.