நெருக்கடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க, வேட்புமனு பத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலில் நாம் அமோக வெற்றியீட்டுவோம். நாடு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.
எமது ஆட்சியில் நாம் மிகத்தெளிவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவான காலப்பகுதியே உள்ளது.
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாடு வளமிக்க நாடாக அபிவிருத்தி அடையும் என்பதுடன் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும்.
நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.
ஏனென்றால், இப்பொழுது ஏனைய அரசியல் கட்சிகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்துள்ளதுதேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம்.
நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இயன்றவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.
இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. பலம்பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.