தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று வேட்பு மனுபத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்
சர்வமத தலைவர்களுடன் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ ” நாட்டில் இன்று சிலர் தங்களின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளின் இந்த செயற்பாட்டை மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.இந்த நாட்டை சுமார் 50 முதல் 60 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை முன்கொண்டு சென்று நாட்டை நிர்வகிக்க தம்மால் இயலும் என தெரிவிக்கின்றனர்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் நாட்டில் மீண்டும் ஆட்சியை கோருகின்றனர். இந்த ஊழல் அரசியலில் இருந்து நாம் வெளியேற வேண்டும்.
நடைபெறவுள்ள தேர்தலின் ஊடாக நாட்டில் அரசியலில் திருப்புமுனை ஏற்படும். நாட்டின் இறைமையை பாதுகாக்கக்கூடிய தலைவர் ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டும்” இவ்வாறு விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.