லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வம் பாகம் 1 திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 திகதி வெளியானது.
தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான இந்தத் திரைப்படம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு, அவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் சாதனை படைத்தது.
மேலும், இதில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின், நீண்ட கால உழைப்பிற்கான அங்கீகாரமாக பல விருதுகளையும் தொடர்ச்சியாக குவித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் பட்டியலில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் தேசிய விருதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
இவர், ஏற்கனவே ரோஜா, மின்சாரக்கனவு, லகான், கண்ணத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, மாம் போன்ற படங்களுக்கு தேசிய விருதை வெற்றிப் பெற்றுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்காக மீண்டும் 7 ஆவது தடவையாக சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்று சாதனைப் படத்துள்ளார்.
அத்தோடு, சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும், சிறந்த ஒலிக்கலவைக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் ஊடாக பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையிலான லைக்கா புரடக்ஸன் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த திரைப்படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்வை பெற்றதுடன், வசூலிலும் வேட்டையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.