”தேர்தல்காலங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காகவே தாம் அமைச்சு பதவி வகித்தபோது தேர்தல் செலவீனங்கள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக” ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சூரியவௌ பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.தேர்தல் பிரசார பணிகளும் இடம்பெறுகின்றன.
இன்று பிரசாரங்களை பார்க்குமிடத்து அவை தேர்தல் மோசடியாகவே தெரிகின்றது. ஏனெனில் அவற்றில் லஞ்சப்பணம் பயன்படுத்தப்பட்டது.
ஊழல்மோசடிகளில் மூழ்கியுள்ள அரசியல் தலைமைகளே நாட்டின் ஆட்சியாளர்களாக வருகின்றனர்.இந்த ஊழல்களை ஒழிப்பதற்காகவே நான் தேர்தல் செலவீன சட்டத்தினை கொண்டுவந்தேன்.
நான் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்தபோது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிராக செயற்பட்டனர். எனினும் பாரிய சிரமத்திற்கு மத்தியில் நாம் நாடாளுமன்றில் சட்டமூலத்தை நிறைவேற்றினோம். அதன்பின்னர் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குறித்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகளே நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
தேர்தல் செலவீனங்கள் தொடர்பாக வாக்காளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 20 ரூபாவே செலவிட வேண்டும் என நானும் மற்றுமொரு வேட்பாளரும் அண்மையில் தேர்தல் ஆணையாளரிடம் கூறியிருந்தோம்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 68 லட்சம் ரூபா தேவைப்படுவதாக கூறியிருந்தனர்.இவை அவை அனைத்தும் மோசடியானவையே” இவ்வாறு விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.