“எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணத்திற்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளார்.
கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று அதன்நன்மைகளை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச பணியாளர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாவாக கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறந்த பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எம்மால் அதனை செய்யமுடிந்தது. அநுரவாலும் சஜித்தாலும் இதனை செய்யமுடியுமா என நான் கேட்கின்றேன்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அவர்களால் இந்த அளவு அதிகரிக்க முடியுமா? வாழ்க்கை செலவினை அதிகரிப்பது எமது நோக்கமல்ல. நாம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கமாட்டோம். தேர்தலை இலக்காக கொண்டு நாம் அதனை செய்யவில்லை.
நடைமுறையில் செயற்படுத்த இயலுமான விடயங்களையே நாம் கூறுவோம்.அடுத்த ஆண்டு வருமான வரி விலக்குவழங்குவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகவே எதிர்வரும் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இது தனிநபர் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதல்ல . நாட்டை நெருக்கடிக்கு இட்டுச்செல்லாமல் அபிவிருத்திபாதைக்கு இட்டுச் செல்வதற்கான பயணமாகவே புதிய ஆட்சி அமைய வேண்டும் நெருக்கடியை கண்டு ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதியாகும் கனவில் உள்ளனர்” இவ்வாறு ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.