ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் வேட்பாளருக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள், தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் செலவுகளுக்கு எவ்வாறு பணம் கொண்டுவரப்பட்டது மற்றும் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது தொடர்பான விரிவான தகவல்கள் தேர்தல் பிரசார அறிக்கையில் அடங்கியிருக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது