தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று காலை 9.15க்கு அறிமுகம் செய்து வைத்து ஏற்றி வைத்துள்ளார்.
கட்சிகொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளவாறு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் ஆரம்பத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
குறித்த உறுதிமொழியல் , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்றும்,
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.