நாட்டின் இக்கட்டான தருணத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே முன்னுாிமை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு நேற்று பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள மஹரகம இளைஞர் சேவை மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
மக்களின் நலலுக்காக தேர்தலை நடத்த முடியாமற்போனதற்கு நான் வருந்தவில்லை.
மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கும் நான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு மணித்தியாலமும் பெறுமதி வாய்ந்தது
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அந்த நேரத்தை திறைசேரி நிதியை செலவிட்டிருந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிருக்க முடியாமல் போயிருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இது தொடர்பாக கலந்துரையாடினோம். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினோம்.
இந்த நேரத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிருக்க முடியுமா என்று கேட்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டை முன்னேற்றுவதில் முக்கியமானதாக இருந்தது.
இரண்டு வருடங்களில் உலகில் எந்த நாடும் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்காது. சர்வதேச சமூகம் எங்களைப் பாராட்டுகிறது.
இவ்வாறு பணியாற்றியிருக்காவிட்டால் இந்த நாடு அழிந்திருக்கும். ஆனால் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
2022இல் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர ஏன் அவர்களுக்கு உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குத் தொடர முடியவில்லை?
அதனால் இந்தத் தேர்தலை ஒத்திவைத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் நாட்டில் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முடியாது.
அது மக்களின் உரிமை. அந்த வாக்களிக்கும் உரிமையை நான் மதிக்கிறேன். அதேபோல், மக்களின் வாழ்வுரிமையையும் நான் மிகவும் மதிக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.