தாய்லாந்து தலைநகர், பேங்கொக்கிலிருந்து பயணித்த உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக் விமானநிலையத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டவர்களுடன் பயணித்த உள்நாட்டு விமானமொன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானமானது, தனது பயணத்தை ஆரம்பித்து 40 நிமிடங்களில் சச்சோங்சாவ் மாகாணத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றுக் கூறப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான பகுதியானது சதுப்பு நிலமாக இருந்தமையால், சிதைவடைந்த உடற்பாகங்களை மீட்டமை பெரும் சவாலாக இருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களில் ஹொங்கொங்கை சேர்ந்த ஐந்து சீன பிரஜைகளும், தாய்லாந்து பிரஜைகள் இருவரும் இரண்டு விமானிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் அறிவிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.