பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இன்று (23) மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் நகர்புற போர் பயிற்சி களத்தில் இடம்பெற்றது.
கேணல் ரவீந்திர அலவத் தலைமையில் இலங்கை வந்த இந்திய இராணுவ படையினரும் இலங்கை இராணுவ படையினரும் இராணுவப் போர்கள் பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கான வருகையிலிருந்து இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய-இலங்கை இராணுவ படையினர் இங்கு தமது அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொண்டதுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் உதவியதாகத் தொிவிக்கப்படுகின்றது.
மேலும், இரு குழுக்களும் தங்கள் திறமைகளை மெருகேற்றும் வகையில், கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததன் மூலம் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள படையினரிடையே நட்புறவை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இராணுவப் பயிற்சியை பார்வையிட பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஷா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோருடன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பயிற்சியின் இறுதியில் இரு நாட்டுப் படையினரும் பயன்படுத்திய இராணுவ உபகரணங்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.