பிரதமர் மோடி, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார்.
இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது. இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வா்த்தகம்-தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கொண்ட குழு பங்கேற்றது.
இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் கருத்து வெளியிட்ட சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், `குறித்த கலந்துரையாடல் ஆக்கபூா்வமானதாக இருந்ததாகவும், மேலும் பிரதமா் மோடியின் சிங்கப்பூா் பயணத்துக்கு களமாகவும் அமைந்ததாகவும் தெரிவித்தார். சபிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூருக்கு வர உள்ளார். அவரது பயண திகதி இன்னும் இறுதியாகவில்லை என்று குறிப்பிட்டார்.
மேம்பட்ட உற்பத்தி, விமானப் போக்குவரத்து, கடல்வழி இணைப்பு ஆகிய புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுமாா் 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடு இப்போது அதன் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய மேம்படுத்தலைத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் இந்தியாவுடன் நாங்கள் ஒத்துழைப்பில் இருப்பது மிகவும் சிறந்தது’ என்றார்.
பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அவரது பயணத்தில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.