மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி ஷான்ஷன் (Shanshan) ஜப்பான் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ககோஷிமா மாகாணத்தின் சத்சுமசெண்டாய் நகருக்கு அருகில் கரையைக் கடந்தது.
பாரிய அளவிலான சேதங்கள் பற்றிய எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டிருந்தது.
மணிக்கு 252 km வேகத்தில் அதிக காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புயல் தாக்கத்தினால் 70 வயதுடைய ஒரு தம்பதியினரும், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புயல் தாக்கத்தால் 12.5 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூஷுவின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 600 மி.மீ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 255,00 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ககோஷிமா மற்றும் மியாசாகி மாகாணங்களில் குறைந்தது 39 பேர் காயமடைந்துள்ளதாக NHK தெரிவித்துள்ளது.
தெற்கு ஜப்பான் மற்றும் அங்கிருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சில அதிவேக ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உட்பட மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை வார இறுதியில் புயல் நெருங்கும் என்றும் எதிர்பார்க்கிறது.