ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.